மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி 3 மற்றும் 4வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பரவை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகர் அரசுப் பள்ளிகளில் இவர்களின் குழந்தைகள் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு எஸ்.டி. காட்டுநாயக்கர் பழங்குடியினர் பெயரில் கடந்த ஆண்டு வரை ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக எஸ்.டி. காட்டுநாயக்கர் பழங்குடியினர் பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஓராண்டுக்கு மேலாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அப்பகுதி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள வன காளியம்மன் உச்சிமாகாளியம்மன் கோவில் மந்தையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சமயநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.