வேலூர்: வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி இன்று (செப்டம்பர் 24) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, கடந்த மார்ச் 14-ம் தேதி மறுவாழ்வுக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சையுடன் மறுவாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரங்களில் தகவல் வெளியானது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சிஎம்சி மருத்துவமனையில் துரை தயாநிதியை இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த மாதம் 26-ம் தேதி திமுக துணைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், துரை தயாநிதி சிஎம்சி மருத்துவமனையில் இருந்து இன்று (செப்டம்பர் 24) காலை 10.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து, துரை தயாநிதியை முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையிலிருந்து வெளியேறிய துரை தயாநிதியை படம் எடுக்க விடாத பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை மருத்துவமனை ஊழியர்கள் தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.