சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரீகத்தின் உச்சம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீரை வீடு முழுவதும் கொட்டுவது அநாகரீகத்தின் உச்சம்.

நாகரீக சமுதாயம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொது மேடைகளில் ஒருவர் பேசுவது மற்றவர்களை இழிவுபடுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவருக்கு உரிமை உண்டு. அதற்கான சட்டப் பாதுகாப்புகள் உள்ளன. இந்த முறையான, சட்ட வாய்ப்புகளை நிராகரித்து சட்டத்தை கையில் எடுப்பது சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை சீர்குலைக்கும் அராஜக செயலாகும். சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த அராஜக செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.