சென்னை: தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான “ஆனந்த விகடன்” தனது இணையதளத்தில் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த இந்தியர்களை கை, கால்களில் கட்டிப்போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் திமிர்த்தனமான செயலையும், அமெரிக்க அரசின் திமிர்த்தனமான செயலை நியாயப்படுத்தும் மத்திய அரசையும் விமர்சித்து “கேலிச்சித்திரம்” வெளியிட்டிருந்தது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத விகடன் குழும இணையதளத்தை முடக்கி மத்திய அரசு மிரட்டி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஊடகத்துறையில் விகடன் குழுமம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அரசியல், பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் மட்டுமின்றி கலை, இலக்கியம், தொல்லியல், வரலாறு, அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவது இதன் தனிப் பாரம்பரியம். இதன் காரணமாக, சிறைக்குச் செல்லவும் தயங்காத துணிச்சலும் கொண்ட பாரம்பரியம் கொண்டது. விகடன் மீடியா குழுமம் மட்டுமல்ல, பாஜக, ஆர்எஸ்எஸ், மற்றும் அதன் பரிவாரங்களும் தங்கள் செயல்பாடுகளை விமர்சிக்கும் எந்த ஊடகத்தையும் சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை.
சர்வதேச பத்திரிகை சுதந்திர குறியீட்டில், 180 நாடுகளுடன் ஒப்பிடும் போது, 2014-ல் 140-வது இடத்திலிருந்து 2024-ல் 159-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதுவரை கவுரி லங்கேஷ் உட்பட 61 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்தில் மிகவும் மோசமான நிலையை வெளிப்படுத்தும் நாடாக எமது நாடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விகடன் குழும இணையதளத்தை முடக்கியது பாஜகவுக்கு எதிராக மூச்சு விடக்கூட முடியாத பாசிச வெறியை காட்டுகிறது. கருத்துரிமையைப் பறிக்கும் இந்த பாசிசச் செயலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.