நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், சொந்த ஊருக்கு சென்று மக்களின் பாராட்டை பெற்றார். அவருக்கு ஊர் மக்கள் சார்பில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஏழை குடும்பத்தில் பிறந்து, இஸ்ரோ தலைவராக உயர்ந்த அவருக்கு ஊர் மக்கள் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பெற்றோரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தியதோடு, கைலாசநாதர் கோயிலிலும் வழிபாடு நடத்தினார்.
இந்நிகழ்வில், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் திருக்குறள் புத்தகம் வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மேயர் மகேஷ், எம்.எல்.ஏக்கள் மனோதங்கராஜ், எம்.ஆர்.காந்தி, ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
பாராட்டு விழாவில் உரையாற்றிய நாராயணன், இஸ்ரோ தலைவராக தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தார். இது தனக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, இஸ்ரோவில் பணியாற்றும் அனைத்து விஞ்ஞானிகளின் முயற்சிக்கான அங்கீகாரமாக காண வேண்டும் என்றும் கூறினார். இந்தியா கடந்த ஆண்டு மட்டும் நூற்றுக்குமேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை தனது ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இந்தியாவின் விண்வெளித் துறை உலகளவில் மிகுந்த வளர்ச்சியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார். இறைவன் அருள், பெற்றோரின் ஆசிர்வாதம், மற்றும் கடின உழைப்பின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று உரையாற்றினார்.