சென்னை: முல்லைப் பெரியாறு அணையை 142 அடியில் தேக்கி வைக்கலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் 2014-ல் தீர்ப்பளித்தது. ஆனால், பேபி அணையை பலப்படுத்த கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அக்டோபர் 1, 2024 அன்று, இந்த அணை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

கமிஷன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் ஆய்வு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு கூடுதல் தலைமை செயலாளர் விஸ்வாஸ், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முல்லைப் பெரியாறு அணை, மெயின் அணை, பேபி அணை, சுரங்கப்பாதை பகுதி, நீர்வழிப்பாதைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் பின்னர் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முல்லைப் பெரியாறு அணையின் பலம் மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசிக்கப்படும். அதன்பிறகு, ஆய்வு தொடர்பான அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.