புதுச்சேரி: டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஆழ்கடலில் தேசிய கொடியை ஏந்தி நீச்சல் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணிக்கு முதல்வர் ரங்கசாமியும் வாழ்த்து தெரிவித்தார். புதுவையில் ஸ்கூபா டைவிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அரவிந்த் தருண்ஸ்ரீ. ஒவ்வொரு முறையும் இந்திய வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் போது அதை ஆழ்கடலில் வித்தியாசமான முறையில் தனது குழுவினருடன் கொண்டாடி வருகிறார்.
டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றது. இதனை கொண்டாடும் விதமாக ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தருண்ஸ்ரீ தனது குழுவினருடன் புதுச்சேரி அருகே கடலில் 50 அடி ஆழத்திற்கு சென்று 40 நிமிடங்களுக்கு மேல் கிரிக்கெட் விளையாடி இந்திய தேசிய கொடியை ஆழ்கடலில் ஏற்றி இந்தியாவின் வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க சாதனை. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்குப் பிறகு இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.