மதுரை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழன் பயணம்’ என்ற பெயரில் 3 கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அக்டோபர் 12-ம் தேதி மதுரை அண்ணாநகரில் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குவார்.
இதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. துப்புரவு பணியாளர்களால் கால்கோள் நடப்பட்டது. பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன், செயலாளர் கதலி நரசிங்கம் பெருமாள், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராம சீனிவாசன், “தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவிற்கு பாஜக தேசியத் தலைவர் நட்டா வரவிருந்தார்.

பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நட்டா வரவில்லை. அவருக்குப் பதிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதைத் தொடங்கி வைப்பார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் வருகிறார்கள் என்பது இன்று இரவு முடிவு செய்யப்படும். நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்துடன் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும். சென்னை கோட்டையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைக்கும் வரை இந்தப் பயணம் முடிவடையாது.
மதுரை அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள இடம். விஜயகாந்தும் கமல்ஹாசனும் மதுரையில் தங்கள் கட்சிகளைத் தொடங்கினர். எம்ஜிஆருக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுரை ஒரு முக்கியமான இடம். அதனால்தான் மதுரையில் தொடக்க விழா நடைபெறுகிறது,” என்றார்.