புதுடெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், என்சிஇஆர்டியின் அலட்சியத்தால் 6ம் வகுப்பு மாணவர்கள் 3 புத்தகங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, 3 முதல் 12ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணியில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) ஈடுபட்டுள்ளது.இந்த புதிய பாடத்திட்டம், நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், நிர்வாக காரணங்களுக்காக இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும், 3 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.
தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆனால், இதுவரை 6ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதேபோல், தெலுங்கு, இந்தி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடப் புத்தகங்கள் இதுவரை அச்சிடப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து படிக்கின்றனர். என்சிஇஆர்டியின் அலட்சியத்தால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.