சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகிலேயே சரக்கு கிராமம் ஒன்றும் உருவாக்கப்படும் என தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திப் நந்தூரி தெரிவித்தார்.
கிரீன் ஃபீல்ட் விமான நிலையத்திற்கு அருகில் அமையக்கூடிய இந்த சரக்கு கிராமம், மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் உடன் நேரடியாக இணைக்கப்படும் என்று அவர் கூறினார். ஓசூர் விமான நிலையம் குறித்தும் இதே போல ஒரு சரக்கு கிராமம் உருவாக்கப்படும் என சந்திப் நந்தூரி அறிவித்தார்.
உற்பத்தி துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்டது என்பதால், சரக்கு போக்குவரத்துக்கு தேவையான அடிப்படைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓசூர் விமான நிலையத்திற்கு இடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.
அரசு தற்போது அந்த இடத்தை கையகப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. விமான நிலையங்களுக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய திட்டங்கள், இந்திய ரயில்வே உடன் இணைந்து, தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்து காரிடார்கள் மற்றும் அதிவேக ரயில் சேவைகளை உருவாக்குவதற்கான ஆய்வினை மேற்கொள்கின்றன.
சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்த புதிய விமான நிலையம், சுமார் 45 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படும். 2029 ஆம் ஆண்டில் இந்த திட்டம் செயல்பாடிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பரந்தூர் பகுதியில் உள்ள மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.