திருச்சி ஸ்ரீரங்கம் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் ஸ்ரீபெரும்புதூர் ஜீய சுவாமிகளை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தன்னைப் பற்றி போலியான உரையாடலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பொய்யான, அவதூறான கருத்துகளை வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்ரீபெரும்புதூர் ஜீய சுவாமிகள் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரங்கராஜனை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தவிர, நீதிமன்றத்தை விமர்சித்து ரங்கராஜன் மற்றொரு வீடியோவை வெளியிட்டதாகவும், அதற்கு சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் பதிலளித்ததாகவும், இந்த கருத்துக்கு ரங்கராஜன் இணையதளத்தில் கடும் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் வழக்கறிஞர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.