சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஓஎம்ஆர் விடைத்தாளில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாதிரி விடைத்தாள் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓஎம்ஆர் விடைத்தாளில் டிஎன்பிஎஸ்சி புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படிவம் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ‘ஓஎம்ஆர் விடைத்தாள்-மாதிரி’ என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனாவைப் பயன்படுத்தி தொடர்புடைய வட்டங்களில் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை கறுப்பாக்க வேண்டும்.
மேலும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் பகுதி-2-ல் கையொப்பமிட்டு கையொப்பம் இட வேண்டும். இனிமேல் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் அனைத்து ஓஎம்ஆர் அடிப்படையிலான தேர்வுகளிலும் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் முன் புதிய மாதிரி ஓஎம்ஆர் விடைத்தாளை கவனமாக படித்து புரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.