சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சில முக்கிய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். சமீபத்தில் விமான நிலையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோட் எஃப் சான்றிதழ் பெறுவது முக்கியம் என கருத்து தெரிவித்தார்.
இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று என்ற பெருமையுடன் சென்னை விமான நிலையம் தற்போது பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து கடும் போட்டியை எதிர்கொள்கிறது. தமிழக தொழில்துறை அமைச்சர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், விமான நிலைய மேம்பாட்டு பணிகள் மற்றும் சரக்குகளை கையாள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது சென்னை விமான நிலையத்தில் 3 டெர்மினல்கள் உள்ள நிலையில், கூடுதலாக சரக்கு போக்குவரத்துக்கென தனி முனையம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எந்தவொரு விமான நிலையத்திற்கும் சரக்கு சேவை மூலம் அதிக வருவாய் ஈட்டுவது முக்கியம் என்பதால் இது ஒரு முக்கிய நோக்கமாகிறது. தற்போது பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சரக்கு போக்குவரத்து அதிகளவில் செல்கிறது.
மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு வாகனங்களை எளிதாக்கும் வகையில் விமான நிலையத்துக்கு நேரடி இணைப்பு சாலை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி அளித்தார்.
தவிர, கோட் எஃப் சான்றிதழின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த சான்றிதழ் பெரிய பயணிகள் விமானங்களைக் கையாளும் திறனைக் குறிக்கிறது, இது சர்வதேச பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று அவர் நம்புகிறார்.