சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை-தமிழக கடற்கரையை நோக்கி வரும் 11-ம் தேதி நகர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 10-ம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 11-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்களிலும் (ராமநாதபுரம் தவிர) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரம்பலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 13-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான மூடுபனி காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக மீனவர்கள் வரும் 11-ம் தேதி வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.