தமிழக அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 01.04.2025 முதல், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலுள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட அனைத்து அசையா சொத்துக்களையும், பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது, பதிவு கட்டணத்தில் 1% விலை குறைப்பை அளிக்கப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, யாருக்கு இந்த சலுகை கிடைக்கும், யாருக்கு கிடையாது என்பவற்றை பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த சலுகை மகளிர் பெயரில் சொத்துகள் வாங்கும் விற்பனை ஆவணங்களுக்கு மட்டும் பொருந்தும். இப்படி ஒரு சொத்தை வாங்குபவர் ஒரு பெண்ணாக இருந்தால், அல்லது அந்த சொத்தினை பெண்கள் பெயரில் கூட்டாக வாங்கினால், அந்த சொத்து பதிவு சலுகைக்கு தகுந்ததாக இருக்கின்றது.
இந்த சலுகை, குடும்ப நபர்களுடன் அல்லது குடும்ப நபர்கள் அல்லாதவர்களுடன் சேர்ந்து, குறிப்பிட்ட சொத்தினை பெண்கள் பெயரில் வாங்கினால் மட்டுமே பொருந்தும். ஆனால், கணவன் மற்றும் மனைவி சேர்ந்து வாங்கிய சொத்துகளுக்கு இந்த சலுகை பொருந்தாது. அதேபோல், குடும்ப உறுப்பினர்களாக உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும், இந்த சலுகை பொருந்தாது.
சொத்தினை பிரித்து வாங்கி ஆவணங்களை பிரித்துக் கொள்ளும் போது, ஒவ்வொரு ஆவணமும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு உட்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம், ஒரே பெண் பெயரில் பல குறைந்த மதிப்புள்ள ஆவணங்களை வாங்கினால், இந்த சலுகை பொருந்தும்.
அதேபோல், சொத்தினுடைய சந்தை மதிப்பு 10 லட்சத்திற்கு மேல் இருந்தால், இந்த சலுகை பொருந்தாது. மேலும், ஆவணங்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட பதிவு கட்டணம் திரும்பப் பெற முடியாது என பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது.
மேலும், சொத்துப் பதிவுக்குப் பிறகு கட்டிட ஆய்வு தேவைப்படும் சந்தர்ப்பங்களில், களஆய்வுக்குப் பிறகு, சொத்து மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பிடப்பட்டால் இந்த சலுகை பொருந்தாது என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.