டெல்லி: ரயில்களில் 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வெளியூர்களுக்கு செல்ல நினைத்தால் குறைந்த செலவிலும், அதிக வசதியுடனும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதிகமான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால், வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களைப் பொருட்படுத்தாமல் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடினமாக இருக்கும். அதற்காக ரயில்வே கொண்டு வந்த திட்டம்தான் முன்பதிவு. விழாக்காலம் முதல் சாதாரண முன்பதிவு வரை அனைத்திற்கும் 120 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டது. ஆனால் இனி அப்படி இல்லை, இனிமேல் ரயில் டிக்கெட்டுகளை பயண நாள் தவிர்த்து 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே பதிவு செய்ய முடியும்.
இந்த புதிய விதி நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன் 120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பாதிப்பு இருக்காது. அவர்கள் தங்கள் முன்பதிவு தேதிகளில் பயணம் செய்யலாம். நேற்றிரவு (31.10.2024) வரை செய்யக்கூடிய 120 நாட்கள் முன்பதிவு ரயில் டிக்கெட் செல்லுபடியாகும் என்று ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது.
31.10.2024 வரை 60 நாட்களுக்கு மேல் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஓராண்டில் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ரயில்வே பல ஆய்வுகளை நடத்தியது. ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது நகரத்திற்கு பல முறை பயணம் செய்யும் 50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை இது அடையாளம் கண்டுள்ளது.
அத்தகைய பயணிகளின் பயண வரலாற்றின் அடிப்படையில், சிறப்பு ரயில்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பண்டிகைக் காலங்களில் ரயில்வே அவர்களுக்கு செய்திகளை அனுப்புகிறது. இதனால், அவர்கள் செல்லும் சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.