சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தகுதி அடிப்படையிலான மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம், தமிழகத்தைச் சேர்ந்த 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்கள் அடங்கிய வருகைப்பதிவு, ஹால் டிக்கெட் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (dge.tn.gov.in) பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் இவற்றை தவறாமல் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும், மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டு பள்ளி முத்திரை பதிக்க வேண்டும்.

மேலும், தேர்வு மைய விவரங்களை மாணவர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால் டிக்கெட்டுகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் சிவப்பு மையினால் திருத்தம் செய்து பள்ளி தலைமையாசிரியரிடம் சான்றளிக்க வேண்டும். இத்தகவலை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.