சென்னை: சிவராமன் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அது தற்கொலை தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலி பயிற்சியாளர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, அவரது தந்தையும் மதுபோதையில் கீழே விழுந்து இறந்தார்.
சிவராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அதிமுக, பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி சிவராமன் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: சிவராமன் குற்ற உணர்வில் தற்கொலை செய்து இறந்துபோனார். இந்த மனவேதனையில் அவரது அப்பா மது அருந்தி சாலையில் விழுந்து இறந்துவிட்டார்.
சிவராமன் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிந்ததும் அவரை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியின் தம்பிகள்தான். நான் சாகப்போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என வருத்த கடிதம் எழுதியிருந்தார்.
அதைக் கட்சி தம்பிகளிடம் கொடுத்து விசாரிக்க சொன்னேன். தான் செய்தது தவறு என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இது தற்கொலைதான். இதற்கு பின்னால் யாரும் இல்லை” என தெரிவித்துள்ளார்.