சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதன் காரணமாக, 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து விலகியதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல குறைந்த அளவிலான சுழற்சி நிலவுகிறது. 19-ம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில், கேரளா – கர்நாடகா பகுதிகளுக்கு அப்பால் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதேபோல், 24-ம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இன்று நாளை மற்றும் 19 முதல் 22 வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்று, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும், 18 மற்றும் 19-ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூரில் தலா 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.