சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவுறுத்தியுள்ளார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடைபெறும் விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பாடுபட்ட அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், சிறந்த பணியாளர், சுயதொழில் செய்பவர் பிரிவில் 10 விருதுகள், ஹெலன் கெல்லர் விருது பிரிவில் 2 விருதுகள், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூக சேவகர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனம், அதிக வேலை வாய்ப்பு உள்ளவர்களுக்கு சிறந்த அமைப்பு என தலா ஒரு விருது வழங்கப்பட உள்ளன.
ஊனமுற்றோர் மற்றும் தொடக்கக் கல்வி மையங்களில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர், மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர், நடத்துநர், பொதுக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையில்லா கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளில் சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனப் பிரிவுகளில் மொத்தம் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருதுடன் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியானவர்கள் இந்த விருதுக்கு https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தின் இரண்டு பகுதிகளை வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆசியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார்.