சென்னை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் மயங்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் அகவிலைப்படி, மற்றும் உணவுப் பணியாளர்களை உள்ளடக்கிய காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல் ரூ.9 ஆயிரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றுமுன்தினம் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆர்.கலா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மலர்விழி உடனிருந்தார். நேற்று காலை 10 மணி வரை நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் பட்டினியால் மயங்கி விழ தொடங்கினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க உறுப்பினர்களை சமூக நலத்துறை இயக்குநர் ஆர்.லில்லி நேரில் அழைத்துப் பேசினார். அப்போது, சங்கத்தினர் தங்களின் 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை இயக்குனரிடம் அளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
எங்களது கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே துறை இயக்குனர் மற்றும் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். இயக்குனரை சந்தித்தபோது, துறை சார்ந்த சில கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றுவதாக கூறினார். ஆனால் காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரமும், சத்துணவு ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இன்று 63,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும், என்றனர்.