சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு நீர்மட்டம் உயர்த்தப்பட்டது.
பொது பயன்பாட்டிற்காக தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டது; திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பாலங்கள், சென்னையில் நேப்பியர் பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.88 கோடியில் புதிய நேப்பியர் பாலம் என பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட நேப்பியர் பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.6.55 கோடியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் தரமற்ற தடுப்புச் சுவர் கட்டியதால் பெரும் ஊழல் நடந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. எனவே இந்த தடுப்புச்சுவர் கட்டியதில் நடந்த ஊழல் குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்பசரம்பேட்டை அருகே அ.தி.மு.க. அரசு தரமான தடுப்பணை கட்டியது போல், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி சட்டமன்ற தொகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்ட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. திருச்சி புறநகர் வடக்கு மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்கள் சார்பில் செப்டம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை காலை 10.35 மணிக்கு கொள்ளிடம் பாலம் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில், முன்னாள் அமைச்சர் எம்.பரஞ்சோதி, முன்னாள் எம்.பி. ப.குமார் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.