தஞ்சாவூர்: பேராவூரணி அருகே தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், வலப்பிரமன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் குத்து விளக்கேற்றி வைத்தார்.
அதேபோல், பேராவூரணி சேதுசாலையில் கட்டப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை, முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பையில் முன்னோடி விவசாயி கோவிந்தன் தென்னந்தோப்பில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பயிர் பாதுகாப்பு மையம் கோயம்புத்தூர், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய, தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாமை தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நா.முத்துக்குமரன், கை.குமணன் ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர்.
நிகழ்வுகளில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கே.கோகுலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கணேசன், இளங்கோ, தெட்சிணாமூர்த்தி, கிளைச் செயலாளர் திருப்பதி, தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குநர் ஏ.வெங்கட்ராமன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் வள்ளியம்மாள், ராகினி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.