கோவை: அவிநாசி சாலையில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சுமார் 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,790 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் தமிழ்நாட்டின் மிக நீளமான பாலமாகும். இதன் திறப்பு விழா வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை, தொழில்துறை, ஐடி, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக வேகத்தில் முன்னேறி வரும் இந்த நகரில் போக்குவரத்து நெரிசல் நீண்ட காலமாக சிக்கலாக இருந்து வருகிறது. குறிப்பாக அவிநாசி சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுவதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்ட பின் இந்த சிக்கல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலம் 17.5 மீ அகலத்தில் 4 வழிச் சாலையாக கட்டப்பட்டுள்ளது. அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப்ஸ் கல்லூரி, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஏறு மற்றும் இறங்கும் தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 98 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மீதமுள்ள சிறிய பணிகள் மற்றும் சோதனை ஓட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். இதற்குப் பிறகு நீலாம்பூர் வரையிலான நீட்டிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும். இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் கோவை நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.