கோவை மாநகரின் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு, இன்று அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி இணைந்து பங்கேற்றார். கோவையில் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவற்றில் காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் போன்ற பகுதிகள் குறிப்பிடத்தக்கவையாகும். தனியார் பேருந்துகள் கோவை மாநகராட்சி – மத்திய மண்டலத்தில் வார்டு 48 அருகே ஜி.பி. சிக்னல் பகுதி, மேம்பால பகுதியை சுற்றி அமைந்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் செயல்படுகின்றன.
தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகளின் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, கோவை மாநகராட்சி ஆம்னி பேருந்து நிலையத்தை ரூ.3.68 கோடி மதிப்பில் புதுப்பித்து தரத்தை உயர்த்தி இருக்கிறது. இந்த புதுப்பிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இங்கு 40 முதல் 50 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இதன் மூலம், பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் குறிப்பாக குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு தேவையான வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் பாலூட்டும் அறை, காத்திருப்போர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கட்டண கழிப்பிடம் மற்றும் 32 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இப்போது இந்த புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகராட்சி மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் ரூ. 30.72 கோடி மதிப்பில் 15 புதிய திட்டங்களை திறந்து வைக்கவும், ரூ. 271 கோடி மதிப்பீட்டில் 1028 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டவும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கோவை வந்தார். அவர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து, புதிய திட்டங்களை திறந்து வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் அறசு கொறடா கா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.