சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே முடிந்து காத்திருப்போர் பட்டியல் இருந்தது. இதையடுத்து, 15-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட வழித்தடங்களில் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதேபோல், நவம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் சென்னை செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவும் முடிந்துவிட்டது. குறிப்பிட்ட நாட்களில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மற்றும் வெளியூர் செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது.
அதன்படி, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாமல் சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் வேலை மற்றும் மேற்படிப்புக்காக சென்னையில் வசிக்கின்றனர்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது ஊருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு மக்கள் தற்போது ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்கள், முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.
எனவே, உரிய நாட்களில் கூடுதல் சிறப்பு ரயில்களையும், தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களையும் அறிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுகின்றன.
தவிர, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னை – ஈரோடு இடையே முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்பதிவு செய்யப்படாத ரயில்களை தென் மாவட்டங்களுக்கு இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்,” என்றார்.