தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கழகங்களில் 2015-ம் ஆண்டு முதல் புதிய நியமனம் இல்லை. இதனால் பணிமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போக்குவரத்துக் கழகங்கள் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்களை நியமிப்பது, பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவது என பல்வேறு முயற்சிகள் மூலம் பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்கிறது. அதே நேரத்தில், 2015 மார்ச் நிலவரப்படி, 1.44 லட்சம் பணியாளர்கள் இருந்த நிலையில், தற்போது 1.10 லட்சம் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த காலகட்டத்தில் விரைவு போக்குவரத்து கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதனால் புதிய நியமனம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “காலியிடங்களை நிரப்ப, பணி நியமன விதிகளில் திருத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய நியமனம் தொடர்பான அறிவிப்பு, வரும் அமர்வில் வெளியாக வாய்ப்புள்ளது,’ என்றனர்.