சென்னை: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து கிழக்கு வங்காள விரிகுடாவில் வலுவடைகிறது.
ஒடிசாவின் பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே அக்., 25-ம் தேதி அதிகாலை, தீவிர புயல் கரையை கடக்கலாம். கடற்கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 23-ம் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
வங்காள விரிகுடா பகுதிகள்: இன்று, அந்தமான் கடல், மத்திய மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.
இன்று மத்திய மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.