குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆரஞ்சு மற்றும் பட்டார்ஃப்ரூட் நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழா, காதணி விழா, குழந்தைக்கு பெயர் சூட்டு விழா, சீமந்தம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் தாம்பூலத்தில் மரக்கன்றுகள் வழங்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பார்க் நர்சரியில் அழகான மலர் செடிகள், பழ செடிகள், மூலிகை செடிகள், வீட்டுத்தோட்டம் மற்றும் வீட்டு வாசலுக்கு நிழல் தரும் மரக்கன்றுகள் என பல்வேறு வகையான செடிகள் வழங்கப்படுகின்றன. இதை ஊக்குவிக்கும் வகையில், அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்கா, பர்லியார் பண்ணை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் குறைந்த விலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மண்ணில் ஈரப்பதம் இருப்பதால், மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்ற காலமாக உள்ளது. குறிப்பாக, ஆரஞ்சு பழ மரக்கன்றுகளும், பட்டர்ஃப்ரூட் மரக்கன்றுகளும் தற்போது விற்பனைக்கு தயாராக உள்ளன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குறைந்த விலையில் மரக்கன்றுகளை வாங்கி பயனடையலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
மேலாளர் கூறுகையில், ”நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், மரக்கன்றுகள், செடிகள் மட்டுமின்றி, அதிக மகசூல் தரும் பழம் மற்றும் காய்கறி பயிர்களின் நடவு பொருட்களையும் குறைந்த விலையில் பெற்று தோட்டக்கலை பயிரை ஊக்குவிக்கலாம்” என தெரிவித்தார்.