சென்னை: அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்றுனர்களை நியமனம் செய்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். யோகா பயிற்சி உடலுக்கும் மனதிற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, இது உடல் வலிமை, ஆற்றல் நிலை மற்றும் மன அமைதியை மேம்படுத்துகிறது. தினமும் யோகா பயிற்சி செய்வது பல்வேறு நோய்களை குணப்படுத்துவதுடன், புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது.
அனைத்து தரப்பு மக்களும் யோகா பயிற்சி செய்யும் வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆயுஷ் தேசிய நல மையங்களில் 650 யுனிசெக்ஸ் யோகா பயிற்றுனர்கள், 650 பெண் யோகா பயிற்றுனர்கள் உட்பட 1,300 பேரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விஜயலட்சுமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.
பகுதி நேர அடிப்படையில் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 250, அதாவது மாதம் 32 வகுப்புகளுக்கு ரூ. 8,000 வழங்க வேண்டும். இதில் 20 வகுப்புகள் மருத்துவமனைகளிலும், 12 வகுப்புகள் பள்ளிகள் மற்றும் முகாம்களிலும் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மட்டும் வகுப்பு நடத்துபவர்களுக்கு மாதம் ரூ. 5,000 வழங்க வேண்டும். அதன்படி யோகா பயிற்றுனர்களை நியமிக்க வேண்டும், என்றார்.