புதுடெல்லி: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிய தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி செய்ததாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்குகளில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் செந்தில் பாலாஜி, அதிகாரிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், உதவிப் பொறியாளர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை முடிவடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதால், அதை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒய்.பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், ”அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில், அதிகமானோர் சம்பந்தப்பட்ட வழக்குகளை மட்டும் தனித்தனியாக விசாரிக்க முடியும். மற்ற வழக்குகளை ஒருங்கிணைத்து, தினமும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்,” என்றார்.
இதற்கு தமிழக அரசு, “செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை துரிதப்படுத்த விசாலமான, பெரிய அறைகள் ஒதுக்கப்படும்” என்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தில் விசாலமான, காற்றோட்டம் உள்ள பெரிய அறையை ஒதுக்க வேண்டும்.
இந்த பணி மாறுதல் வழக்குகளை விரைந்து விசாரிக்க, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விரைவில் வரவழைத்து, விசாரணை தேதியை முடிவு செய்ய வேண்டும். தனி நீதிபதி ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து வெவ்வேறு தேதிகளில் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி, மே 2-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.