தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன். வயது 37 . இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் மூளை சாவு அடைந்தார்.
இதையடுத்து மருத்துவர்கள், இளைஞரின் உறவினர்களிடம், உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து இளைஞரின் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் தெரிவித்தனர்.
இதையடுத்து மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து சிறுநீரகம், இதயம் ஆகிய உறுப்புகள் எடுத்து சிறுநீரகம் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், அனுப்பி வைக்கப்பட்டது. அவரது கல்லீரல் பழுதடைந்து விட்டதால் அதனை மாற்ற அறுவை சிகிச்சை செய்யவில்லை.
இது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் 26வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும். இதையடுத்து உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், மற்றும் டாக்டர்கள் மரியாதை செலுத்தினர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை மொத்தம் 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.