திருச்சி: “தான் இல்லாமல் பாஜக–அதிமுக கூட்டணி உருவாகியதும், அதில் பிற கட்சிகளை சேர்ப்பதையும் அண்ணாமலை விரும்பவில்லை” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதச்சார்பின்மையை காக்கும் பேரணி நாளை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த பேரணி, இன்றைய சமய அரசியல் சூழலில் மதச்சார்பின்மையை காப்பதற்கான அறைகூவலாகும் என அவர் கூறினார். பாஜக ஆட்சியிலிருந்து சிறுபான்மை சமூகங்கள் மீது வெறுப்பு பரப்பும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. சிஏஏ, முத்தலாக், வக்ஃபு திருத்தம் உள்ளிட்ட சட்டங்கள் மதச்சார்பின்மைக்கு எதிரானவை என்றும், இவை அரசியலமைப்பின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு விரோதமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு இஸ்லாமிய சமூக சொத்துக்களில் தலையிடுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், இது தனிப்பட்ட மதத்தையே இலக்காக்கும் செயல் என்றும் தெரிவித்தார். பாஜக ஆட்சி 11 ஆண்டுகளாக தங்களது வெறுப்புப் போக்கை வடமாநிலங்களில் பரப்பி அரசியல் லாபம் எடுத்து வருவதாகவும், தற்போது தமிழ்நாட்டிலும் அதே முயற்சி நடைபெறுகிறதென்றும் கூறினார்.
தமிழகத்தில் சமூகநீதியை பேசாமல், மதத்தை அரசியல் கருவியாக பாஜகவினர் பயன்படுத்துவதாகவும், முருகன் மாநாடுகள் நடத்தி மத நம்பிக்கையை தாங்கள் செயல்படுத்த முயல்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தற்போது பாஜக கூட்டணியில் இல்லாததையும், இவற்றை மீண்டும் சேர்க்க முடியாத நிலையில்தான் பாஜக-அதிமுக கூட்டணி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக தலைவர் அண்ணாமலை 2026ல் ஆட்சி அமைப்போம் எனக் கூறினாலும், அவரே அந்தக் கூட்டணியை சிதைக்க முயல்கிறார் எனவும், பாஜக–அதிமுக கூட்டணியில் தன்னைத் தவிர்த்து நிகழும் எந்த நடவடிக்கையும் அவருக்குப் பிடிக்காது என்பதால்தான் அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறாரென்றும் விமர்சித்தார்.
அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் ஏற்படும்; ஆனால் மதவாதம், ஜாதியவாதம் போன்ற பிரச்சனைகள் ஊழலைவிட பெரியவை எனவும், மக்கள் சிந்திக்க முடியாத அளவுக்கு மத வெறியும், ஜாதி வெறியும் ஆட்சி அமைக்க முயலுகிறது என்பதையும் திருமாவளவன் வலியுறுத்தினார்.