திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை துவங்கிய 25 நாட்களிலேயே கொள்முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால் நெல் கொள்முதல் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்கி, எடை குறைப்பு சுமத்தப்படுவதால், கொள்முதல் நிலைய ஊழியர்கள் விரக்தியடைந்துள்ளனர். அறுவடை துவங்கிய 25 நாட்களில் கொள்முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், அவற்றை சேமிக்க திறந்தவெளி கிடங்குகள் அமைக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அனுப்ப மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, பேரளம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு சரக்கு ரயில்கள் வரவழைக்கப்பட்டாலும், தினமும் 10,000 டன் நெல் மட்டுமே அனுப்ப முடியும். இதனால் ஏற்படும் எடை இழப்புக்கு கொள்முதல் நிலைய ஊழியர்களே காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். போராட்ட அறிவிப்பால் மூவாநல்லூரில் மட்டும் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து இடங்களிலும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் திறக்கப்பட வேண்டும்.
விவசாயி தேவன்குடி நெடுஞ்செழியன் கூறுகையில், “நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் ஏற்படும் எடை இழப்பை ஈடுசெய்யும் வகையில் கொள்முதல் ஊழியர்கள் வற்புறுத்தும்போது, மூட்டைக்கு ரூ.40 மற்றும் கூடுதலாக 2 கிலோ நெல் வழங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே திறந்தவெளி கிடங்குகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் புகாரியிடம் கேட்டபோது, ”மாவட்டத்தில் தினமும் 15 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் சூழ்நிலையில், அனைத்து நெல் மூட்டைகளையும் ரயிலில் அனுப்ப வாய்ப்பில்லை. இருப்பினும், நெல் மூட்டைகளை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் திறப்பது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.