ஸ்ரீரங்கம்: பூமியின் வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா தனிச்சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழா ராபத்து இயற்பாவாக மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் நேற்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆரியர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை அபிநயம், இசையுடன் பாடினர். நம்பெருமாள் இரவு 7.30 மணிக்கு அர்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பகல்பத்து முதல் நாள் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். அதேபோல், பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் அர்சுன மண்டபத்தில் வித்தியாசமான அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாள் (9-ம் தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். 10-ம் தேதி ராப்பத்து விழாவின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி. அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 5.15 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசலில் எழுந்தருளுகிறார்.
இந்நிகழ்ச்சியில் நம்பெருமாள் ரத்தின அங்கி அணிவித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடப்பார்கள். 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 16-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 17-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படாது. சொர்க்கவாசல் திறக்கும் நாளான ராப்பண்டு எனப்படும் திருவாய்மொழி திருவிழா வரும் 10-ம் தேதி துவங்குகிறது.
விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் வித்தியாசமான அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். விழாவின் ஏழாம் நாளான 16-ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 17-ம் தேதி எட்டாம் நாளான திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ம் தேதி பத்தாம் நாளான தீர்த்தவாரியும், 20-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் மற்றும் இயற்பா சத்திரமறை நிகழ்ச்சி நடைபெறும்.
இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், கோயில் உள் கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தினசரி நடைபெறும் திருவிழாக்களில் 10 விதமான இசைக்கருவிகள் இசைக்கப்படும். வைகுண்ட ஏகாதசி விழாவில் 18 வகையான இசைக்கருவிகள் இசைக்கப்படும். இதில் பெரியமேளம், நாதஸ்வரம், தக்கை, சங்கு, மிருதங்கம், வெள்ளியெதாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்ளிட்ட 18 இசைக்கருவிகள் இசைக்கப்படும்.
சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, பிரம்பு காப்பு, வைர அபயஹஸ்தம், பவள மாலை, காசு மாலை, முத்து சாரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட புனித ஆபரணங்கள் அணிந்து அர்ஜுன மண்டபத்தில் காட்சியளித்தார்.