ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பணிகள் முழுமையாக முடிந்து ஆகஸ்ட் மாதம் திறக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால், நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, ரூ. 90.20 கோடி மதிப்பீட்டில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல், எதிர்காலம் சார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் விமான நிலையம் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரயில் நிலைய சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய இரு மாடிக் கட்டிடம், 2 எஸ்கலேட்டர்கள், 4 லிஃப்ட், டிக்கெட் வழங்கும் மையங்கள், காத்திருப்பு கூடம், கழிப்பறைகள், ரயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள், வணிக மையங்கள், பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மூடப்பட்ட நடைபாதைகள் ஆகியவை அடங்கும்.

சீரமைப்பு பணியின் போது ராமேஸ்வரத்தில் புதிய ரயில் நிலைய கட்டிடம் ராமேஸ்வரம் கோவில் உருவத்தில் கட்டப்பட்டு வருகிறது, இதற்கான தூண்கள் ராமநாதசுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள தூண்கள் போல் கட்டப்பட்டு வருகிறது. மேலும் 3, 4, 5 ஆகிய பிளாட்பாரங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் மாதிரி படம் ராமநாதசுவாமி கோயிலின் உருவத்தில் கட்டப்பட உள்ளது முன்னதாக, புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்காக 2022 டிசம்பரில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனால் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம், ராமநாதபுரம் வரை இயக்கப்படுகிறது. இதற்கிடையில், பாம்பன் புதிய பாலம் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளதால், பயணிகள் இன்றி காலி பெட்டிகள் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு தினமும் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் 65 சதவீத வளர்ச்சிப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், பாம்பன் புதிய ரயில் பாலம் பணிகள் முழுமையாக முடிந்து, மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும், வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்.