ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஊர்வலமும், கடந்த 1-ம் தேதி இரவு கம்பம் சாத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம், பக்தர்கள் வழங்கும் நேர்த்திக்கடனுக்கான ஏற்பாடுகள் நேற்று நடைபெற்றன.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விறகுகள் கொளுத்தப்பட்டு, நேற்று இரவு கோவில் முன் 12 அடி நீளம், எட்டடி அகலத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து மேள, தாளம் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியபடி கோவில் அர்ச்சகர் ராஜசேகர் மற்றும் கோவில் பூசாரிகள், கண்காணிப்பாளர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் குண்டத்தில் இறங்கினர். அவர்களை தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஏற்கனவே புனித நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் கையில் வேப்ப இலையுடன் காத்திருந்து குண்டம் இறங்கி தரிசனம் செய்தனர்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா, பண்ணாரி அம்மன் கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பங்கேற்று குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி இன்று காலை அமுதா ஐஏஎஸ் குண்டத்தில் இருந்து இறங்கி பண்ணாரி அம்மனை வழிபட்டார். குண்டத்தின் இரு முனைகளிலும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு பக்தர்கள் குண்டம் சரியாக இறங்க உதவினர். தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், போலீசார், தனிப்படைகள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், திருநங்கைகள் குண்டத்தில் இருந்து இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று மாலை வரை பக்தர்கள் குண்டம் இறங்கிய பிறகே கால்நடைகள் இறங்க அனுமதிக்கப்படும். குண்டம் திருவிழாவையொட்டி பண்ணாரி அம்மன் தங்க கவசம் அணிந்து வீணை முழங்க உற்சவத்தில் அருள்பாலித்தார். இதேபோல் விழாவையொட்டி சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, பண்ணாரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நாளை புஷ்பரத ஊர்வலமும், 10-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 11-ம் தேதி தங்கரத ஊர்வலமும் நடக்கிறது. 12-ம் தேதி பௌர்ணமி திருவிளக்கு பூஜையும், ஏப்., 14-ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.