சென்னை: சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுதவிர பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் பகுதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனை சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் (சிஸ்டம்ஸ் மற்றும் ஆபரேஷன்ஸ்) ராஜேஷ் சதுர்வேதி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா (செயல்பாடு மற்றும் பராமரிப்பு), கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ்பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, எம்.ஜி.ஆர்., சிலைக்கு பின்புறம், ரயில் நிலையத்தின் மறுபுறம், புதிதாக புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம், பேவர் பிளாக் போட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு கூடுதலாக 300 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். தற்போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1,300 இருசக்கர வாகனங்களும், 180 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தப்படும்.
இந்த கூடுதல் இடம் பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும். மேலும் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை எளிதாக பயன்படுத்த ஊக்குவிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.