புதுடெல்லி: நாடு முழுவதும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவற்றை அடிக்கடி துவைக்காமல், அசுத்தமாகி துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஹிமந்சு சேகர் நேற்று கூறியதாவது:- ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
நாங்கள் மாதத்திற்கு இரண்டு முறை விரிப்புகளை கழுவி சுத்தம் செய்கிறோம். சூடான நாப்தாவை கிருமிநாசினியாகவும் பயன்படுத்துகிறோம். யுவி ரோபாட்டிக்ஸ் மூலம் விரிப்புகளை கழுவி சுத்தப்படுத்தும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். முதற்கட்டமாக, ஜம்மு மற்றும் திப்ருகார் ராஜ்தானி ரயில்களில் பயணிகளுக்கு யுவி ரோபோட்டிக்ஸ் மூலம் சுத்திகரிக்கப்பட்ட விரிப்புகளை வழங்குகிறோம். ஒவ்வொரு முறையும் ரயில் அதன் இலக்கை அடையும் போது, இந்த முறையைப் பயன்படுத்தி விரிப்புகள் உடனடியாக சுத்தப்படுத்தப்படுகின்றன.
புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி விரிப்புகளில் உள்ள கிருமிகளைக் கொல்லும் வகையில் இந்த முறையைப் பயன்படுத்தி விரிப்புகளைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 2010-க்கு முன், ரயில்களில் வழங்கப்படும் போர்வைகள் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும். அதன் பிறகு, இந்த நடைமுறை மாதம் ஒரு முறை ஆனது, இப்போது போர்வைகள் மாதம் இரண்டு முறை துவைக்கப்படுகின்றன.
இவ்வாறு ஹிமான்ஷு சேகர் கூறியுள்ளார். நாடு முழுவதும் தினமும் 6 லட்சத்துக்கும் அதிகமான போர்வைகள் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. வடக்கு ரயில்வேயில் மட்டும் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போர்வைகள் வழங்கப்படுகின்றன.