நாகை: நாகை – இலங்கை இடையே, பிப்., 22 முதல், பயணிகள் கப்பல் சேவை துவங்க உள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு, ‘செரியாபாணி’ என்ற பயணிகள் கப்பல், 2023, அக்., 14-ல் இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் கப்பல் சேவை அதே மாதம் 23-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் நாகையிலிருந்து இலங்கைக்கு சுபம் என்ற கப்பல் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ என்ற கப்பல் இயக்கப்பட்டது.
வாரத்தில் 5 நாட்கள் கப்பல் சேவை இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாகை-இலங்கை இடையே பிப்ரவரி 22-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. வாரத்தில் செவ்வாய்கிழமை தவிர மற்ற 6 நாட்களிலும் கப்பல் இரு திசைகளிலும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.sailsubham.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதில், ஒருவர் 10 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம். இலங்கையில் 3 நாட்கள் தங்கி சுற்றுலா செல்வது உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய பொதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.