திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டன. இதேபோல் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய வைத்து ஊர்ந்து சென்றன. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
குறிப்பாக திருத்தணி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதன்படி, நேற்று காலையும் பனிப்பொழிவு அதிகரித்த நிலையில் காணப்பட்டது. இதனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்து சென்றன. மேலும் நேற்று காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
இதேபோல், பனிப்பொழிவு காரணமாக ரயில் போக்குவரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக நேற்று திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விரைவு மற்றும் மின்சார ரயில்களும் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
கடும் பனிமூட்டம் காரணமாக ரயிலை விரைவாக இயக்க முடியாமல் என்ஜின் டிரைவர்களும் சிரமப்பட்டனர். இதனால், மிதமான வேகத்தில் ரயில்களை இயக்கினர். மேலும் நேற்று திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சிக்னல்கள் சரியாக தெரியவில்லை. இதனால் அரக்கோணம் ரயில் பாதையில் அனைத்து ரயில்களும் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டன. பின்னர், காலை 9 மணிக்குப் பிறகு போக்குவரத்து அனைத்தும் வழமைக்குத் திரும்பியதாக பயணிகள் தெரிவித்தனர்.