சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த ரயில் வண்டலூர் – ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, ரயிலின் கீழ் பகுதியில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டது. ரயில் தண்டவாளத்தில் இருந்து வந்த சத்தம் காரணமாக டிரைவர் எமர்ஜென்சி பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். பின்னர், இதுகுறித்து அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, ரயில்வே ஊழியர்கள், ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, ரயில் சக்கரத்தில் இரும்பு கம்பி சிக்கியதால் சத்தம் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரயிலில் சிக்கிய இரும்பு கம்பி அகற்றப்பட்டது. தண்டவாளத்தில் கம்பி எப்படி வந்தது, மர்ம நபர்கள் வைத்தாரா, ரயிலை கவிழ்க்க யாராவது உத்தரவிட்டார்களா என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, கொல்லம் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால், சென்னை நோக்கி வந்த ரயில்கள் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தின் நடுவே நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாததால் ரயிலில் இருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதையடுத்து, ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். ஊரப்பாக்கம் பகுதியில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதும், நேற்று முன்தினம், தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், அங்குள்ள தண்டவாளத்தை இணைக்கும் இரும்பு கம்பியை அங்கு மறந்து வைத்துவிட்டு சென்றதும், எக்ஸ்பிரஸ் ரயிலில் இரும்பு கம்பி சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே தண்டவாளப் பகுதி முழுவதும் சோதனை நடத்திய போலீஸார், இதுபோன்ற இரும்புப் பொருட்கள் வேறு எங்கும் மறந்து விட்டுச் செல்லப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். வேறு எங்கும் இரும்பு பொருட்கள் இல்லை என்பது தெரியவந்தது. ரயில் சேவை வழக்கம் போல் இயங்கியது.