ஈரோடு: ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஒவ்வொரு தாலுகாவிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இயற்கை சந்தைகள் அமைக்கப்பட்டன. இத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, மாவட்ட அளவில் இயற்கை சந்தை அமைக்க திட்டமிடப்பட்டு ஈரோடு பேருந்து நிலையத்தில் இரண்டு நாள் இயற்கை சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

இதில், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் கடைகளை அமைத்துள்ளனர். ரசாயன கலப்படம் இல்லாத காய்கறிகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், அழகுசாதன பொருட்கள், பருத்தி ஆடைகள், கைப்பைகள், மூலிகை பொருட்கள் இயற்கை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. மலை கிராமங்களை சேர்ந்த பழங்குடியின பெண்களும் பல்வேறு வகையான இயற்கை பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.
பஸ் ஸ்டாண்டுக்கு வந்த மக்களும் இயற்கை சந்தையை பார்வையிட்டு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைப்பதாக மகளிர் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இயற்கை சந்தை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.