சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர். கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் வலிமை குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இதேபோல் நேற்று (ஆக. 4) காலை முதலே வெயில் கொளுத்தி வந்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவு வரை பெய்த மழை அதிகாலை வரை நீடித்தது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. அடையாறு, எண்ணூர், திருவொற்றியூரில் 10 செ.மீ. கத்திவாக்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், செம்பரம்பாக்கம், கொளத்தூரில் 9 செ.மீ. ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், மணலி, அண்ணாநகர், தேனாம்பேட்டை, ஐஸ் ஹவுஸ், கேளம்பாக்கம், காஞ்சிபுரத்தில் 7 செ.மீ. மழை பெய்தது.
நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி, சூளை பகுதி உள் சாலைகள், டைம்லோஸ் சாலை, ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை, திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் சாலை, நாவலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாலை முதலே தீவிரமாக ஈடுபட்டனர். சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் உதவியுடன் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்ட அடைப்புகளையும் சரி செய்தனர்.
காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வைத்து வாகனங்களை ஓட்டிச் சென்றனர். கனமழை மற்றும் காற்று காரணமாக அடையாறு மேம்பாலம் அருகே மரக்கிளை முறிந்து விழுந்தது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், விடியற்காலை பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.