சென்னை: பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் சென்னையில் 19 மண்டலங்களில் வரும் 14-ம் தேதி நடக்கிறது. பொது விநியோகத் திட்டப் பயன்களை பொதுமக்கள் எளிதாகப் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாதந்தோறும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2024 டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 14.12.2024 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், பதிவு / மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகள் செயல்படுவது, தனியார் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள், சேவைகளில் குறைபாடுகள் இருப்பின், பொதுமக்கள் இந்த முகாமில் புகார் அளித்து, குறைகளை உடனுக்குடன் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.