பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விளையாட்டு விழா, முத்தமிழ் விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்துப் பேசினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி.இராணி வரவேற்றார். சென்னை நந்தனம் கல்லூரி பேராசிரியர், பாடலாசிரியர் முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி முத்தமிழ் விழா சிறப்புரையாற்றினார்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள். அதனை நாம் வாழ்வியலாக நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. சினிமா வாழ்வின் ஒரு பகுதி தான். அதன் பின்னால் நாம் செல்லக்கூடாது. மனிதனுக்கு ஆறறிவு உள்ளது. நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். அது உங்கள் வாழ்வை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். கல்லூரிக்கால நட்பு மிகச்சிறந்தது. அது காலம் முழுவதும் தொடர வேண்டும். பேராசிரியர்களை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். படிக்கும் காலத்தில் அவர்கள் அருமை நமக்குத் தெரியாது. வாழும் காலத்தில் தான் அவர்கள் அருமை நமக்குத் தெரியும்.
இந்த சமூகத்தை வழிநடத்தப்போவது நீங்கள் தான். நீங்கள் நேர்வழியில் செல்ல வேண்டும். பெற்றோரை, ஆசிரியர்களை, சமூகத்தை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சமூகத்துக்கு நல்ல பிள்ளையாக வளருங்கள். ஒருவருக்கொருவர் நன்றி சொல்ல பழகிக் கொள்ளுங்கள்” இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து, கல்லூரி ஆண்டு விழா மலரை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்டனர். மேலும், அதே கல்லூரி மாணவரான செல்வகுமார் என்பவர், ‘ஏழையின் கைகள்” என்ற அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவை செய்வதற்காக அவருக்கு சால்வை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், கல்விப்புரவலர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், என்.எஸ்.சேகர், மாரிமுத்து, சுப.சேகர், அ.அப்துல் மஜீத், ஜெய்பிரகாஷ், குழ.செ.அருள்நம்பி, பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ர.ராஜ்மோகன் நன்றி கூறினார்.