பழநி: தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தண்டாயுதபானி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாஜக அரசு நாட்டை தவறான அரசியல் பாதையில் கொண்டு செல்கிறது. பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மிரட்டி வருகிறது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டத்தின் முன் நின்று வெற்றி பெற்றவர் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. ஆனால் கவர்னரால் தாங்க முடியவில்லை.
அதிமுக – பாஜக கூட்டணி பலவீனமான கூட்டணி. எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சரிந்து வருகிறது. கூட்டணி அமைந்தால் எழுச்சி ஏற்படும். ஆனால் அந்த கூட்டணியில் அப்படி இல்லை. இந்த கூட்டணியால் அதிமுகவினர் கவலையடைந்துள்ளனர். இந்த கூட்டணியை அதிமுகவினர் விரும்பவில்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதிக தொகுதிகள் கேட்போம்.

பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசியது தவறானது. ஆனால் பெரியார் சொல்லாத எதையும் அமைச்சர் பொன்முடி சொல்லவில்லை. அரசு நிகழ்ச்சியில் அவர் அப்படி பேசவில்லை. திராவிடர் கழகக் கூட்டத்தில் அப்படிப் பேசினார். அவரது தவறை நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. அப்படி பேசியதற்காக அவருக்கு தண்டனை கிடைத்துள்ளது.
ஒரு தவறுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமைச்சர் பொன்முடியை மற்ற கட்சிகள் குறிவைத்து வருகின்றன. சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. எந்த அடிப்படையும் இல்லாமல் மாநில தலைவர் செல்வ பெருந்தகையை இணைத்து பேசுவது நியாயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.