மதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாலிகிராமத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை (கடை எண்: 7637, 7638) இடமாற்றம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2.9.2024 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு கடைகளையும் மாற்ற உத்தரவிட்டார். ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் இரு கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்றாமல் உள்ளனர். இந்த மதுபானக்கடைகள் தொடர்ச்சியாக இயங்கி வருவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே ஆட்சியர் உத்தரவிட்டும் மதுக்கடைகளை இடமாற்றம் செய்யாத டாஸ்மாக் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீதர், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு கடைகளையும் மதியத்திற்குள் மூடாவிட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விசாரணையை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இரு கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார். இதைப் பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.