சென்னை: சென்னை, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், லூப் ரோடு மீனவர்கள் சிலருக்கு, மாநகராட்சியால் அமைக்கப்பட்ட சந்தையில் கடைகள் வழங்கப்பட்டன. வேறு பகுதிக்கு கடைகள் ஒதுக்கப்படாததால், அப்பகுதியில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த 21-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மயிலை நொச்சிக்குப்பம் மீனவர் கிராம சபையில் லூப் ரோட்டின் மேற்கு பகுதியில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றினர். மீனவர்கள் போராட்டம் நேற்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனை ரிப்பன் மாளிகையில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள், “மீன் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும், குடியிருப்பு பகுதிகளை பாதிக்காத வகையில் சாந்தோம் நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். மெட்ரோ பணிகள் முடிவடைந்ததால் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட காமராஜர் சாலையை மீண்டும் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும். கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஃபோகஸ் விளக்குகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக லூப் ரோட்டிற்கு விரைந்து வந்து, லூப் ரோட்டின் மேற்கு பகுதியில் ஃபோகஸ் லைட்கள் பொருத்தி மீன் விற்பனைக்கு ஏற்பாடு செய்தனர். குறிப்பாக, ஃபைபர் படகுகளில் செல்லும் மீனவர்கள், அன்றைய தினம் பிடிபட்ட மீன்களை மட்டுமே அங்கு விற்க முடியும்.
ஐஸ் மீன் விற்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் மீன் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்வதாக அறிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டபோது, ”மீன்கடைக்கு வெளியே வலையில் சிக்கிய மீன்களை மீனவர்கள் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் உயர்மட்ட முடிவு எடுக்கப்படும்,” என்றார்.