சென்னை: சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தவும் சமூக நலத்துறை மூலம் அரசு மானியத்துடன் கூடிய ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு மானியமாக ஒரு ஆட்டோ வாங்க தலா ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தின்படி மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இது குறித்து கருத்துகள் கேட்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, உள்துறை செயலர் தீரஜ்குமார் அரசிதழில் கூறியிருப்பதாவது:-
சமூக நலத்துறையின் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தின் கீழ், பெண்களுக்கு சொந்தமான மற்றும் ஓட்டும் ஆட்டோக்கள், பிங்க் ஆட்டோக்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் கண்டிப்பாக பிங்க் நிற சீருடை அணிய வேண்டும். ஆட்டோக்கள் முற்றிலும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட வேண்டும். அவசர காலங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க, வாகனத்தில் இருப்பிட கண்காணிப்பு சாதனங்கள் (GPS, VLTD) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகன உரிமத்தின் பெயரை 5 ஆண்டுகள் வரை மாற்ற முடியாது. இந்த வரைவு திருத்தங்கள் குறித்து 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.